நான் நினைத்திருந்தேன் காலம் மிகவும் மெதுவாக நகருகிறது என்று!
அன்று ஏற்பட்ட விபத்து தான் காலத்தின் வேகத்தை உணரச் செய்தது.!
ஆம் மாலை நேரம் அது லேசான சாரல் மழை தூற துவங்கியிருந்தது கடைத்தெரு வரை செல்ல வேண்டுமே, அம்மாவிடம் கேட்டேன் கண்டிப்பாக போக வேண்டுமா என்று அம்மாவோ வேணா டா பேய் மழை பெய்யுது ஏதாவது பண்ணிக்கலாம் நீ எங்கயும் போக வேண்டாம் என்றாள், நானோ நக்கலாக இது பேய் மழையா அப்போம் பேய் மழை பெஞ்சா என்ன சொல்லுவா அட போமா நீ வேற இப்போம் தான் மழை தூறவே துவங்குது என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்....
ஆனால் மனமோ கடைக்கு போகலாம் மழையில் நனையலாம் என்று கூருகிறது, அம்மா போ என்று சொல்லியிருந்தால் நான் ஒன்னும் போகல மழை பெய்யுது போ என்று கூறியிருப்பேன், ஆனால் அம்மாவோ போக வேண்டாம் என்றதும் போக வேண்டும் என்று தோன்ற.
சரி என்று அம்மாவிடம் கூறி விட்டு வராண்டாவில் நிறுத்தியிருந்த பைக்கை எடுத்தேன் சத்தம் கேட்டு அம்மா ஓடி வந்தாள். உன்கிட்ட என்ன சொன்ன இந்த மழைல எங்கயும் போக வேண்டா என்று தானே சொன்னேன்? என்றால்! நானோ இருமா இப்போம் வந்துடுவேன்னு அவ கைய தட்டி விட்டுட்டு பைக்கை எடுத்துட்டு கிளம்பினேன்
மழை தூறல் சிறிதானாலும் சாலைகளில் ஈரம் சற்று அதிகமாகவே இருந்தது, அந்த தெரு நேரானது தான் ஆனால் ஐந்து மீட்டர் இடைவெளிக்கு ஒரு குறுக்கு தெரு செல்லும் வீடுகள் குறைவு தான் வாகன போக்குவரத்தும் குறைவுதான் வீட்டிற்கும் ஒரு பைக் இருப்பதே அரிது தான்.
கிராமம் என்பதால் அனைவரும் நடந்து சென்றே பழக்கப்பட்டு இருந்தனர் எனது வீட்டை சுற்றி ஐந்தாறு வீடுகளுக்கு அவசர தேவைகளுக்கு எனது பைக்கே பயன்படும் என்றால் யூகித்துக்கொள்ளுங்கள்.
அந்த சரால் மழையினால் கசிந்து ஓடும் மழை நீரை இருசக்கர வாகனத்தில் மெதுவான வேகத்தில் கடக்கும் போது ஏற்படும் அந்த உணர்வு எங்கும் கிடைத்திடாது.
பைக் டயர்கள் சாலைகளில் கசிந்து ஓடும் நீரை கிழித்து செல்லும் அந்த ஓசை...ம்...
இன்னும் சொல்லப்போனால் மழை சாரல்கள் மரக்கிளை இலைகளில் விழுந்து தழுவுவது மத்தளத்தில் மேல் நீர் துளிகள் ஒவ்வென்றாக விழுந்து எழுப்பும் அந்த இசை தரும் இனிமையை ஒத்தது.
கருமேகங்கள் பின் மறைந்தாடும் சூரியனின் மங்கிய ஒளிகள் என எல்லாமே என்னை எங்கேயோ கடத்திச் செல்ல சட்டென பைக்கின் முன் குதித்த அந்த சிறுமி நான் செய்வதறியாது தடுமாறி பிரேக்கை கடுமையாக அழுத்த!
அழுத்திய வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தேன் அந்த சிறுமிக்கு எதுவும் ஆகவில்லை அதுவரை சந்தோசம் என எண்ணி திருப்புவதற்கு முன் குதித்த வேகத்தில் அவள் மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டாள்.
நான் மெதுவான வேகத்தில் சென்றிருந்ததால் கட்டுப்படுத்த முடிந்தது, மழை நீரால் தெருவில் கசிந்த மணல் பைக்கை சறுக்கிவிட்டது நல்ல வேளை என்று மனம் ஏதேதோ சித்தரிக்க.
சரிந்து விழுந்திருந்த என் மீது பைக் விழுந்து கிடக்கிறது எனக்கும் சிறிது கால்களில் சாலை தேய்த்துவிட்டுருக்க வேண்டும் அப்படி தான் காலில் சிறிது எரிச்சல் இருந்தது.
சரி முதலில் யாரும் பார்க்கும் முன் இங்கிருந்து நகருவோம் என்றெண்ணி எழுந்திருக்க முயற்ச்சித்தேன் நகர கூட முடியவில்லை மனம் சிறிது படபடத்தது அந்த மாலை நேர மழை சாரல் பொழிய, இளம் தென்றல் வீசும் வேளையிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.
எனக்கு நானே ஆறுதல் அளிக்க முற்படுகிறேன் மனமோ என்னை ஏதேதோ கூறி என்னை திக்குமுக்காட செய்கிறது,
அந்த சிறுமி அதற்குள் அவள் அம்மாவை அழைத்து வந்து விட்டால் அந்த தாய் வந்து பார்த்துவிட்டு ஓடி வந்து பைக்கை நகர்த்த முயற்சித்தார்கள்,
அவர்களால் முடியவில்லை வேகமாக சென்று தனது கணவரை அழைத்து வந்தார்கள், இருவரும் சேர்ந்து பைக்கை நகர்த்த நானோ எப்படி எழுந்திருப்பது என்பதை மறந்தவனாக எண்ணங்களின் பயமுறுத்தலில் இருந்து மீளாதவனாக சித்தம் கலங்கியவனாக உணர்கிறேன்.
அவர்கள் என்னை ஐயா ஐயா எழுந்திருங்க என்று அழைக்கும் போது தான் என் நினைவலைகள் என்னை கேலி செய்வது போல் உணர்ந்தேன் ஆம் என் பெயர் சந்திரசேகரன் வயது அறுபத்து மூன்று அம்மா இரவு உணவு சமைக்க காய்கறிகள் வாங்கவர சொன்னால் அவளோ எண்பத்தி ஐந்து வயதிலும் அவ்வளவு சுறு சுறுப்பாக உள்ளாள் விழுந்த என்னால் எழ முடியாத போது தான் நினைவுக்கு வந்தது காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதையும், அம்மா அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையும் ஒரு கல்யாணம் பண்ணியிருந்தியனா கொள்ளு பேரனையும் பார்த்திருப்பேன்னு.
நன்றி
Comments
Post a Comment
நன்றி