காரணம் உண்டு


அகப்பட்டுக் கொண்ட பேருந்து நெரிசல், வாழ்வின் அடுத்தது என்ன என்று தெரியாத ஒரு விரக்தியான நிலை, நிம்மதி தராத வீடு, உறவுகள் மத்தியில் மவுனம் என அனைத்திற்கும் காரணம் உண்டு. 

அன்பின் ஓரவஞ்சனையை பார்த்திருக்கிறேன், கடும் சொற்கள் வீசி புன்னகைத்து செல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்னும் அடிமையாகவே வாழ துணிந்தவனுக்கு எதற்கு வாழ்வு ? என்ற கேள்வியுடன் கடந்து செல்கிறேன். வாழ்வு என்பது சாபமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது வரம் கிடைத்த வரத்தினால் சாபத்தை சரி செய்ய முயலுவதே இன்பம் அதனை தவிர வேறு ஏதும் இன்பமில்லை என்ற நிலைப் பாடு தான் என்னுடையது.

படாத அவமானங்கள் இல்லை. பட்டும் திருந்தவில்லை என்றான பின் என்ன செய்வது. அப்படி என்னிடம் பல பேர் கூறியுள்ளனர் இப்போது நானும் பலரை பார்த்து கூறுகிறேன் இருந்தும் என்னையும் இன்னமும் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

இத்தனை அனுபவங்களுக்கு பின்னும் நான் திருந்த வில்லையோ! இல்லையென்றால் இவ்வளவு தான பார்த்துக்கலாம் என்ற எண்ணமாக இருக்க முடியாது. சலிப்பின்றி தினமும் காவல் நிலையம் சென்று ஏதாவது வழக்கு என்மீது போடுங்கள் என்று கூற முடியுமா? நிச்சயம் முடியாது, பின் ஏனிந்த திருந்தாத ஜென்மங்கள் என்ற பெயர். 

எனக்கும் உண்மையில் தெரியவில்லை. நண்பன் ஒருவர் மீது சில வருடங்களுக்கு முன் ஊரில் ஒரு திருமண மான பெண்ணுடன் தொடர்பு என்ற புரளி கிளம்பியது. அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை அவனும். அனைவரும் உண்மையாக இருக்கலாமோ என்று எண்ணத் தொடங்கியது கடைசியில் உண்மை தான் என்ற நிலையில் தான் அனைவரும் அவர்களை நினைவில் கொண்டார்கள் 

அவனும் இளம் வயது என்பதனால் அப்போது இவன் என்ன சொன்ன என்ன என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்கள் கடந்தன அவனுக்கு பெண்பார்க்கும் படலம் வந்தது. ஊரில் மணமகனை பற்றி விசாரிக்க அனைவரும் அவனுடைய பழம் கதைகளை பெண் வீட்டார்களிடம் கூறி அனைத்து சம்பந்தங்களையும் தடை செய்ய அவன் மிகவும் மனம் வேதனை கொண்டான்.

செய்யாத தவறுக்கு ஏனோ இந்த தண்டனை என்று மிகவும் வருந்தினான். அவனுக்கு வேலை வெளியூர் என்பதினால் ஆண்டுக்கு ஒரு முறை வருவதே அதிகம் அதிலும் இந்த பெயர் அவனால் நண்பர்கள் வீட்டுக்கு கூட செல்ல முடியவில்லை. 

அவனை அவனே தாழ்வான நினைத்துக் கொள்கிறான். நம்மை தவறாக தான் அவர்கள் நினைத்திருப்பார்கள் என்று அவனே எண்ணிக் கொண்டு தனிமையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். எதற்கு கல்யாணம் ! அப்படி கல்யாணம் ஆகவில்லையென்றால் எனது தம்பி குழந்தைகள் உள்ளனர் அவர்களை நான் வளர்த்துக் கொள்வேன் என்ற அளவு அவனை சமூகத்தில் இருந்து விலக்கிக் கொண்டான். 

ஒருவன் செய்யாத தவறுக்கு அவன் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய அனுபவம் குறுகி விட்டது இந்த சிறிய அனுபத்திலே அவன் வாழ்கையை மாற்றிக் கொண்டான். 

இப்படி பலவாறான அனுபவங்கள் சேர்ந்து ஏதோ ஒரு முடிவை எடுக்கச் செய்கிறது அதன் பின் சில நாட்களிலோ அல்லது வருடங்களிலோ மனம் மாறத் துவங்குகிறது. அதன் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து இருக்கும் அவ்வளவு தான் தவிர. அவமானங்கள் அனுபவங்கள் ஓர் நாளும் முடியாது ஆனால் இப்படி நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக பட்டை தீட்டப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் இப்படி அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. 

காரண காரியங்கள் இல்லாமல் உலகில் எதுவும் நடப்பது இல்லையென்று எனது குருநாதர் கூறுவார். அது உண்மையும் கூட. 




 




Post a Comment

0 Comments