வயதின் பராமரிப்பு செலவு
- Get link
- X
- Other Apps
கூட்டு குடும்பம் எல்லாம் தற்போது சீரியலில் பார்பதோடு சரி, இப்படி தான் இருந்திருப்பார்கள் போல என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தான் அதிகம்.
ஒரு குடும்ப பெண்ணின் அத்தியாவசியம் என்ன ? குடும்ப நலனை தவிர அவள் மனதில் ஏதும் இல்லை. பசி பட்டினி இல்லாமல் பிள்ளைகளை வளர்த்து விட வேண்டும் என்ற வாசி.
அவள் அதற்க்காக வேலைக்கு செல்லவும் தயங்குபவள் இல்லை. கணவனை எப்படியாவது தினமும் வேலைக்கு அனுப்புவதே அவளுக்கு பெரும் பாடு. இதில் மது பிரியர்களாக இருந்தால் அவர்கள் நிலமையை நினைத்துப் பாருங்கள்.
தனது குடும்பத்திற்காக பெண் என்ன செய்கிறாள் என்றால்? அவள் பெரும் தியாகம் செய்கிறாள். என்பதை மறுக்க எவரும் இல்லை.
காலை முதல் இரவு வரை அவள் ஓயாது உழைத்துக் கொண்டே இருக்கிறாள். காய்ச்சல் தலைவலி என்றால் விடுமுறை கேட்கும் நமக்கு அதை பற்றிப் புரிதல் இருக்காது என்பது மெய்.
அவள் குழந்தை, மங்கை, பெண், தாய், பாட்டி, பின் பூட்டியாகி முகம் சுருங்கி அன்பை மாத்திரம் விதைக்கும் ஆலமரம் ஆகிறாள்.
தன் வயதினால் ஏற்படும் இயலாமையை அவள் மறுக்கிறாள். அவள் அவளுக்கு என்று எதுவும் வேண்டாதவள். ஆனால் காலம் அனைவருக்கும் ஒரு முடிவை வைத்திருக்கும்.
அதில் யாருக்கும் பாரமில்லாமல் போய் விட வேண்டும் என்பது தான் அவளின் எண்ணமாக இருக்கும். ஓடியாடி குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்நாள் முழுவதும் பெரும் தவம் செய்து கிடந்தவள் நிலமை படுக்கை என்று ஆனது.
தான் தூக்கி வளர்த்த பிள்ளைகள் இன்று அவளை குளிப்பாட்டி சோறூட்டி பார்க்கிறார்கள். இருந்தாலும், தான் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், பிள்ளைகள் மனம் என்ன நினைக்குமோ என்ற ஒரு எண்ணம் அவளை வாட்டிக் கொண்டே இருக்கும்.
குழந்தைகளை அனைவரும் ரசிப்பார், ஆனால் வயதான ஒருவரை எப்படி ரசிக்க முடியும். அவள் தோல் சுருக்கம் அருவருப்பு இல்லை அது அழகு அனுபவத்தின் கீறல்கள்.
சில வேளைகளில் அவள் அனைத்தையும் மறந்து விடுகிறாள் பெற்ற பிள்ளைகளை அவளுக்கு நினைவு இல்லாமல் போகிறது. ஆனால் அது பேர பிள்ளைகளுக்கு தமாஷாக இருக்கிறது.
ஒரு உயிர் பிரியும் வேளையில் அதன் கடைசி ஏக்கம் என்னவாக இருக்கும். புதிர்கள் தான் பூரிப்புடன் காத்திருக்கும்.
வயதான அவளை எத்தனை பராமரித்தாலும், அவள் அவளை அறியாமலே வருவோர் போவோர் இடம் எனக்கு சாப்ட ஒண்ணுமில்ல என்று ஏதாவது சொல்லி விடுவார்கள்.
இதனையே ஒரு குழந்தை சொன்னால் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் யாரும், வயதான ஒருவர் சொல்லை விளையாட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதில் விஷம் இருப்பதாகவே எண்ண தோன்றும் இருந்தும் அவள் அப்படிதான் வயசாகிடிச்சி யாருகிட்ட என்ன சொல்லுரோம்னு தெரியாம சொல்லுவா என்று சின்ன சமாதானம் ஏற்படும் என்றால் அந்த அன்பு போதும்.
வயதாக, வயதாக நாம் அனைவரிடமிருந்தும் விலகுகிறோம், அல்லது விலக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆள் நடமாடும் நடு வீட்டில் என்னிடம் மாத்திரம் பேச யாருமில்லை என்ற அந்த கிழவியின் தவிப்பு எத்தனை கொடுமை என்பதை உணர முடிகிறது.
பேச முயன்றாலும் அவள் காதுகள் கேட்கும் திறனை இழந்து விட்டது என்பதை, அவள் எப்படியும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
விதியின் சூழ்நிலையில் அனைவருக்கும் ஓர் நாள் உடலற்ற சுகந்திரமுண்டு. அதுவரை உயிர் பிரியும் வரை ஏதோ புலம்பி, புலம்பி வாழ்ந்தாக வேண்டுமே.
அவள் சிரிக்கிறாள், அந்த சதைகள் வற்றிப் போய் எலும்புகள் நீட்டிக் கொண்டிருக்கும் கைகளை உயர்த்தி அழைக்கிறாள். அவள் அருகில் அமரச் சொல்கிறாள்.
நிமிர முடியாமல் நிமிர்ந்து கன்னங்களை பிடித்து முத்தம் தருகிறாள். கைகளிலும் முத்தம் பதித்து விட்டு கைகளை இருக்க பற்றிக் கொண்டு அவள் மார்போடு அனைத்துக் கொள்கிறாள்.
குரல் அற்ற அவள் குறவளையில் இருந்து மெதுவாக நான் வளர்த்த மக்கா என்று ஆனந்தம் கொள்கிறாள். நமது மனம் எல்லாம் அறிந்தும் அவளை வேடிக்கை பார்க்கிறது.
மரணம் இப்படி தான் நிகழ வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. புண்ணியவான்கள் பலபேர் போராடும் வாழ்வை பார்க்கும் போது, பாவம் செய்தோர் நிலமையை நினைத்து பார்க்கவே சங்கடமாக உள்ளது.
கடைசியில் போராடி ஏதோ தீராத ஏக்கம் கொண்டு ஒற்றை நாடியில் உயிர் மாத்திரம் பிடித்துக் கொண்டுள்ளது. அவளை அப்படி பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் அப்படி தான் இயற்கை நிலை செய்கிறது.
நல்ல படியா போய் சேரட்டும் என்ற அனைவரது பிராத்தனையும். அவளை சுற்றி வருகிறது. இரண்டு நாளையில பரிட்சை இருக்கு பிள்ளைக்கு இன்னும் எத்தன நாள் இழுக்கும்னு தெரியலையே என்ற பிள்ளைகளின் வார்த்தை அவள் காதில் விழுந்து விட கூடாது.
அடுத்த நொடி அவள் உயிர் பிரிந்து விடுவாள். என்ன செய்வது மருமகள் அவள் காதருகே அமர்ந்து சத்தமாக சொல்லி விட்டாள்.
கிழவி நம்மை விட்டு போய்ட்டா என்று இளைய பேரன் குரல் ஓங்கும் பாட்டி செத்துட்டா நாலு நாள் லீவு போடலாம் என்ற ஆசை வேறு. அந்த உயிர் அவள் உடலை விட்டு பிரிந்து எங்கு சென்றுவிடும்.
எங்கும் செல்லாது. நம்ம பாட்டி நம்ம கூட தான் இருப்பா. அவ இருக்கும் போது அத பண்ணாலியே இத பண்ணலியேன்னு யோசிக்காம அவளை சந்தோசமா வழி அனுப்பி வைங்க என்ற வார்த்தைகளும் ஒலிக்கின்றன.
அவளை இத்தனை நாள் பேணி பராமரித்து வந்த மகனோ, மகளோ நிம்மதி அடைவார்கள் ஏதோ ஒரு சுகந்திரம் கிடைத்தது போல அல்லவா உணர்வார்கள்.
பாவம் நீங்கள் நல்லாயிருங்கள் புனித ஆன்மாக்கள் உங்களை ஆசீர்வதிக்கும். முதியோருக்கு செய்யும் பணிவிடை உங்கள் வாழ்நாள் முழுவதும் காக்கும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி