மேகக் கூட்டங்கள்
பகுதி 1
பெரும் காடு அந்த காட்டின் உயிர்ப்பை தன் வசம் கொண்டு எல்லைகளற்றவையாய் கிளைகளின் ஊடேயும், பாறைகளிலும் குடியிருப்பவனாய் எண்ணிலடங்கா தன் இனத்தின் அடைக்கலம் கொண்டு அவர்களே கதியென்று வெளியுலகம் பார்க்காது தன் கூட்டத்தின் நிழலிலேயே இருந்து. எண்ணியிராத பெரும் காற்றில் தனித்து கொண்டு வரப்பட்ட சிறு தேனியைப் போலவே அன்று கோமுகி பதறிக் கொண்டிருந்தாள்.
எந்த திசையில் செல்வதென்பது அவளுக்கு விளங்காமல் இருந்தது. உயிர் இருந்தும் அவள் உயிரை இழந்தவள் போலவே உணர்ந்தாள். அந்த இருள் சிறு விளக்கின் உஷ்ணம் தாங்கியிருந்தது. கடும் குளிர் அதன் ஒளியை மங்கச் செய்திருந்தது. நிழலாடும் அதன் தீபம் அவளை இன்னமும் நெஞ்சடைக்கச் செய்திருந்தது. எங்கோ தூரமாய் கேட்ட கானாக ஓசை அவளுக்கு அலறலாகவே கேட்டது. இசை அதன் உயிர் இழந்திருந்தது அவள் காதுகளில் நுழையும் போது.
பத்து அறைகளுக்கு மேலிருந்த அந்த வீடு மானுட நடமாட்டத்தை ஏனோ விரும்பாமல் இருந்தது. ஊரின் எல்லையில் காவலன் போல காட்சியளிக்கும் அந்த கல் அடுக்குகளால் ஆனா வீடு மனிதர்களுக்கு என்னவோ நரகத்திற்கான வழியாகவே தெரிந்தது. இரவு நேர இரைச்சல்கள் காற்று முழுவதும் நிறைந்து கனத்து வேகம் குன்றி ஊர் நடுவே நின்று விடும். ஊர் மக்களுக்கு அது என்னவோ அபாய சங்கு போலவே கேட்கும்.
உள்ளறையில் பகலும் கூட இரவாகிப் போகும். வீட்டின் உள்ளிருப்பு, தன்னிருப்பை வெளிக்காட்ட பெரும் தயக்கம் கொண்டவையாக விஷ பூச்சிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது. எங்கே அழகு அதிகமாகிறதோ அங்கே ஆபத்து அழைக்கிறது என்று எண்ணிக் கொள் அது நமக்கான பாதையாக நிச்சயம் இருக்காது. என்று கோமுகியின் தாத்தா கூறியது அவளுக்கு இப்போது மெல்லிய நினைவொலியாக காதுகளில் விழுகிறது.
ஓட, ஓட முடியாத அந்த வனம் எண்ணங்களுக்குள் அடங்காத அதன் பெரும் பரப்பு எப்போதும் காந்தல் காற்றை வீசிக் கொண்டிருந்தது. பனியும், சருகும் இமைக்காத ஆந்தைகளும் மனதின் கொடூர ரூபத்தை வெளிக் கொண்டு வந்துவிடுகின்றது. பல்லாயிரம் மக்கள் வாழும் ஊர். அவர்களுள் எல்லைவீட்டின் நினைப்பு வந்தாலே உடல் நடுங்கும் மக்கள் இந்த திசை நோக்கி கை நீட்டுவது கூட இல்லை.
கோமுகி பித்துப் பிடித்தவள் போல் சிரித்தாள். அவள் சிரிப்பு அறையின் மூன்று மூலைகளிலும் மோதி விளக்கு ஒளி வெளிச்சத்தில் சுவர்களில் ஒன்றியிருந்த சிறு பூச்சிகளை நடுங்கச் செய்து மோதிக் கொள்ளும் மேகங்கள் முழங்கும் இடியைப் போல் அவள் காதுகளில் எதிரொலித்தது. எழுந்து நின்றிருந்த விளக்கு ஒளி ஆட்டம் கொண்டு அதன் நிழல் அவள் மேல் மோதி, மோதி நிலையில்லாமல் அலைந்தது.
இரவை கடந்து சென்று விடுவோம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவள் பயம் கொஞ்சம், கொஞ்சமாக விலக. மரணம் நெருங்கியது போல் உணரவில்லை மரணித்தது போல உணருகிறேன் என்ற அவள் எண்ணம். இதற்க்கு மேல் என்ன நடந்து விடப் போகிறது? குளிர் என்னைக் கொல்லும் இல்லையேல் இந்த பயம். ஒன்று உடல் சார்ந்தது மற்றுமொன்று மனம் சார்ந்தது. மனம் என்னால் ஆவது நான் வேற்று திசை உணர்த்துகிறேன் அதற்க்கு. மனம் உடலை காக்கும் அப்படியானால் இங்கு அனைத்திற்கும் மனம் தான் காரணம் என்ற முடிவிற்கு வருகிறாள் கோமுகி.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவள் வாழ்ந்திருந்த வாழ்கையை நினைவு கூர்ந்தாள். அவள் அப்பா. அம்மா. கணவன். தாத்தா என்று ஒன்றாக கூடியிருந்து இரவு உணவு கழித்துக் கொண்டிருந்தனர். தாத்தா பேசுவது எப்போதும் சபையில் ஏற்றுக் கொள்ளப் படும் ஏனென்றால் அவ்வளவு அனுபவங்களை வெளிப் படுத்தும் அவருடைய வார்த்தைகள். அவர் மரணம் பற்றி அன்று பேசினார்.
ஆனால் அவருடைய குழந்தைகள் அதை விரும்பவில்லை. அதை அவர் உணர்ந்து கொண்டார் என்றாலும் அவர் வேறு அணுக்கிமுறை கொண்டு விளக்கினார். மனிதர்கள் அனைவரும் உடல் சார்ந்தே வாழ்ந்து பழகிவிட்டனர். அவர்களால் அவர்களுடைய உடலைக் கடந்து யோசிக்க முடியவில்லை. உடல் இயங்க முக்கால் வாசி காரணம் மனம். மனிதன் தன் மனதை தன் வசப் படுத்திக் கொண்டானேயானால் அவனுக்கு மரண பயம் இருக்காது.
இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள் ஏன்? அவர்களுக்கு வேறு வேலையிருக்காதா உடல் விட்டுப் போன பின்பு அவர்களுக்கு இங்கு என்ன வேலையிருக்கப் போகிறது. மனம் சார்ந்த கல்வி இவற்றை டெலிப்பதி என்று கூறுகிறது. என்றார். கோமுகி அவளுடைய தாத்தாவிடம் அப்படியென்றால் நம்மால் இறந்தவர்களுடன் பேச முடியுமா ? இறந்தவர்கள் நம்முடன் பேச நினைத்தால் பேசலாம். மற்றபடி அவர்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் நம்முடன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. நம் மனம் ஒருமுகம் ஆனால் நம்மால் புலன்களை கடந்து பல அற்புத காட்சிகளை காண முடியும்.
அப்பா ராத்திரி நேரம் இதுவெல்லாம் பேச வேண்டாம் எனக்கு பயமாக உள்ளது என்று கோமுகியின் அம்மா சாந்தி கூறினாள். “பயம் எங்கிருந்து வருகிறது என்று உன்னால் சொல்ல முடியுமா என்று கேட்டார் கண்ணன். சாந்தியின் தந்தை, கோமுகியின் தாத்தா. சாந்தி அமைதியாக இருந்தாள். கோமுகி, எனக்கு தெரியும் பயம் வெளியில் இருந்து வருகிறது என்றாள்.
கண்ணன் கூறினார் வெளியில் இருந்து பயம் கொள்ள எதுவும் இல்லையே என்றார். பயம் உனது கற்பனைகளினால் வருகிறது என்றார். என் வார்த்தைகள் உள் மனம் வசப்படும் போது மனம் கற்பனைக்கும் வசமாகிறது. கற்பனை பயம் போன்ற பிற உணர்வுகளையும் உருவாக்குகிறது. வெளியில் இருந்து ஒன்று உன்னை பயமுறுத்தவே முடியாது என்பதை நம்பு என்றார். “சரி, அப்பா உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா ? என்றாள் சாந்தி. போதும்மா என்றைக்கும் விட இன்று இட்லியும் சாம்பாரும் சூப்பர் என்றார். சத்தமாக சிரித்தபடியே கோமுகி அய்யோ தாத்தா அது கார சட்னி என்றாள் வாயில் இருந்த உணவு அவள் அம்மா சாந்தி மீது தெறிக்க.
உணவு முடித்து அனைவரும் படுக்கைக்கு சென்றனர். கோமுகி அவள் பய உணர்வை சோதிக்க கொல்லைப் புற கதவை திறந்து வெளியில் வந்து அடர்ந்த செடிகளும் வாழை மரங்களும் அசைந்து காரிருளை வரவேற்றுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுள் பயம் உள்ளார்ந்து எழுவதை அவள் உணர்ந்தாள் அசையும் செடிகள் அவளுக்கு வேறு ஏதோ விசித்திரமான உருவங்களாக தெரிந்தன. அவை எல்லாம் வெறும் பிம்பம் என்று அவள் அவளை சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள். எங்கிருந்தோ வந்த மின் மினி பூச்சிகள் அந்த காரிருளை அலங்கரித்தன.
கோமுகியால் அந்த கண் கொள்ளா காட்சியை பார்த்துக் கொண்டு நிற்கமுடியவில்லை. அவள் அந்த மின் மினி பூச்சிகளில் ஒன்றை பிடித்த நினைவு மாத்திரமே அவளுக்கு இருந்தது. இப்போது அகப்பட்டுக் கொண்டிருக்கும் பாழடைந்த இந்த வீட்டிற்குள் எப்படி வந்தாள் என்பது அவளுக்கு இன்னமும் புலப்பட வில்லை.
0 Comments
நன்றி