தூக்கணாங்குருவி
- Get link
- X
- Other Apps
அனைவருக்கும் வணக்கம்;
நினைவுகளில் சிக்கிக்கொண்ட நீண்ட
நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நேசத்தின் கதையை சிறிது அசைபோட வந்தேன்,
ஆம் அன்று ஊரின் அருகில் உள்ள பனை
மரத்தோட்டத்தில் நண்பர்கள் கூட்டான் சோறு சமைப்பதாக கூறியிருந்தனர். நான் பல முறை
அங்கே சென்றிருந்தாலும் வெளியூருக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின் கிட்ட தட்ட பதிமூன்று
ஆண்டுகளுக்கு பின்பு இப்போது தான் செல்கிறேன் காலம் போகும் வேகம் தான் என்ன?
அந்த பனைமரத் தோட்டத்தை நெருங்க
நெருங்க ஒரு வித்தியாசமான பறவை சத்தம் காதுகளில் விழுந்தது, கேட்கும் சத்தத்தை
வைத்துப் பார்த்தால் நிச்சயம் ஒன்று, இரண்டு பறவைகள் இல்லை என்பது புரிகிறது.
அந்த பறவைகளின் சத்தம் அது என்ன
பறவை என்பதை பார்த்தே ஆகவேண்டும் என்று எனக்குள் ஒரு பெரிய எதிர்பார்ப்பை தோன்ற
செய்தது, நானும் வேகமாக சென்றேன்..
அது நான் வியக்கும் வண்ணம், நான்
இதுவரை காணாத பறவை இல்லை நான் அடிகடி பார்த்த பறவை தான் அது, தூக்கணாங்குருவி அதன்
சத்ததை கவனித்தால் இப்படித் தான் கேட்டது எனக்கு.
க்ர்ர்ரர்ர்ர்....டம்...டம்...டம்... டிர்....டிர்.....க்ர்ர்ரர்ர்ர்....என்றொரு
சத்தம்
நண்பர்கள் அனைவரும் சமையல்
வேலையில் மூழ்கியிருந்தனர், சிலர் மது போதையிலும் தான் அதுவும் தேவை தானே
அரசாங்கத்திற்கு ? இல்லை இல்லை மனதிற்கு சுயநலமாய் வாழும் வாழ்கையில் சிறிது பொது
நலன் இருந்தால் தான் என்ன !
நண்பர்களை பார்க்கும் முன்பு அந்த
தோட்டத்திற்குள் நுழையும் தருவாயில் நான் சற்று புது வித ஏகாந்தம் கொண்டேன், மனம்
இயற்கையிடம் தோற்றுப் போவதை உணர்ந்தேன், எண்ணங்கள் ஆச்சர்யத்தின் எல்லையைத் தாண்டி
பரவச பேரானந்தமடைகிறது, ஆம் நான் பார்க்கும் இடம் எங்கும் தூக்கணாங்குருவியின் அழகிய
கண்ணைக் கவரும் இளம் மஞ்சள், கரும் பச்சை வண்ண, கூடுகள் என்னை பேரானந்தத்தில் நிலைத்திருக்கச்
செய்தது.
அந்த ஆனந்தம் என்னில் மலரவே, நானோ நண்பர்கள்
அனைவருக்கும் எனது புன்னகையைப் பரிசளித்துவிட்டு, என் மனம் கவர்ந்த
தூக்கணாங்குருவிகளிடம் மீண்டும் மனதை பறிகொடுக்க வேண்டி அருகில் சென்றேன்.
கூடுகளின் எண்ணிக்கையை பார்க்கும்
போது அசந்து போனேன், ஆம் எங்கிருந்து இத்தனை குருவிகள் வந்திருக்கும்? அந்த இடம்
இந்த குருவிகளுக்காகவே பட்டா போட்டது போன்று உணர்கிறேன்.
அந்த நெருங்கி வளர்ந்த பனை
மரங்களின் ஓலை கீற்றுகளுக்கு இடையே சீராக பாயும் கூறிய, சூரிய ஒளி அம்...மம்..மா.......!!! அதை காண கண்கள் போதவில்லை. லேசான காற்றில்
ஆடும் ஓலைகள் பாயும் ஒளியை இங்கும் அங்கும் போ என்று உதைத்து தள்ளுவது போல்
இருந்தது, அதாவது குழந்தைகள் போடும் விளையாட்டு சண்டை போலவே.
தலையை உயர்த்தி நீண்ட நேரம் பார்க்கமுடியவில்லை
அங்கேயே காய்ந்த ஓலை ஒன்றை விரித்து படுத்துக்கொண்டேன், மல்லாக்காக படுத்து
விட்டத்தை பார்ப்பது உண்மையில் சுகம் தான். அதுவும் மனம் கவரும் இந்த குருவிகளை
பார்ப்பதில் பேரானந்தம் தான் எனக்கு.
குருவிகள் நிறைய வருவதும்
போவதுமாகவே இருந்தது ஆனால் கட்டி முடித்த கூட்டின் மீது இருந்து குருவிகள் மேல
கூறியபடி” கத்திக்கொண்டே இருந்தது, பறவைகளிலேய வித்தியாசமாக கூடு கட்டும் இந்த
தூக்கணாங்குருவிகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, அருகில் தோட்டத்திற்கு நீர் பாய்த்துக் கொண்டிருந்த தூரத்து உறவனான எனது
தாத்தாவிடம் சென்றேன்.
தாத்தா, என்று நான் வரப்பில்
நின்று கொண்டே அழைத்தேன். ஆ.. பேரா எப்படி இருக்க என்று என்னிடம் கேட்க நானும்
தாத்தா நான் நல்லா இருக்க அப்புறம்! அப்படி, இப்படி என்று சிறிது உறவுகளின்
கதையும் என்னுடைய வேலைப் பற்றியும் கேட்டறிந்தார். பதிலுக்கு நானும் அவருடைய மகன்
அதாவது என்னுடைய மாமா மற்றும் சித்தி பற்றியும் அவர்கள் குழந்தைகளின் நலமும்
விசாரித்து முடிக்க ஒரு வழியாகிவிட்டது.
எனக்கோ அத்தனை பொறுமை இல்லைத் தான்
இருந்தும் வேருவளியில்லையே.. சரி, அதன் பின் நான் மெதுவாக துவங்கினேன் தாத்தா என்ன
இது இந்த தோட்டம் புள்ளா தூக்கணாங்குருவி கூடாவே இருக்குது தோட்டகார சண்முக அண்ணா
குருவிகளுக்கினு விட்டுட்டார என்ன? என்று கேட்டேன் !
அட இல்லப்பா இந்த குருவிங்க
இப்போம் வந்து ஒரு எட்டு வருஷம் தான் இருக்கும் என்றார், எனக்கோ எட்டு வருடங்களாக
இருக்கா என்று தோன்றியது மேலும் அவர் தொடர்கிறார்....
பேரா... இந்த குருவிங்க மத்த
பறவைகள மாதிரிலா கிடையாது இதுங்களுக்குன்னு தனி மரபு அதாவது சட்டம் இருக்குதுன்னு
கூட வச்சிக்கலாம்... சட்டமா என்ன சட்டம் தாத்தா குருவிங்களுக்கு இருக்க போகுது
சும்மா கேலி பன்னாதுங்க ! இல்ல இல்ல சொல்லுறத முழுசா கேளு;
சரி சொல்லுங்க; இந்த பறவைங்க
தன்னோட கூட கட்டுறதுக்கு முன்னால அந்த இடத்த முதல்ல தேர்தெடுக்கும் அதாவது கட்டுற வீட்ட
சுத்தி நீர் நிலைகள் இருக்குதா அப்புறம் உணவு அதாவது தோட்டம் இருக்குதா முக்கியமா
சோளம், பயறு இப்படி தானியங்களா இருக்கனும் இன்னும் சொல்லனும்னா எதிரிகளின் கையில்
சிக்காமல் இருக்கணும் இந்த மூனும் இருந்தா தான் முதல்ல இந்த பறவைகள் கூட கட்டவே
ஆரம்பிக்கும்.
என்ன தாத்தா கேக்கவே ஆச்சர்யமா
இருக்குது, இத்துநோண்டு குருவியா இவ்வளவும் பண்ணுது இத பாத்து தான் மனுசனும் வீடு
கட்ட ஆரம்பிச்சிருப்பா போலேயே?!! சரியா சொன்ன பேரா; நீ சொன்னது தான் சரி இந்த
தூக்கணாங்குருவிகள பார்த்து தான் மனிதர்கள் வீடு கட்ட துவங்குனாங்க. சரி தாத்தா
மேலே சொல்லுங்க !
“கோடி கோடியா கொட்டி தீர்த்தாலும்
தூக்கணாங்குருவி போல ஒரு கூட்டை மனிதனால் கட்ட முடியாது என்று சொல்லுவார்கள்.”
அதுபோலவே சரியாக கூடு கட்டத்
தொரியாத ஆண் பறவைகள் சம்சாரி ஆகமுடியாது ! அப்போம் பெண்பறவைகள் கூடு கட்டுவதில்லை யா...?!
என்று நான் தாத்தாவிடம் கேட்டேன்? மேலும் கூற ஆரம்பித்தார்...
அங்க பாரு அந்த கூட்டு மேல நின்னு
கூவுது பாரு அது ஆண்பறவை அந்த கூட்ட பாத்தியா அது இன்னும் முழுசா முடியல இன்னும்
வாசல் அமைக்க வேண்டியுள்ளது இப்போம் அந்த குருவி பெண் குருவியை அழைக்குது நான்
கட்டிய வீட்டை வந்து பாருங்கள் என்று காதலோடு அழைக்கும், அத கேட்டு ஏதாவது பெண்
பறவை வந்து அந்த கூட்டை பார்க்கும் பார்த்து விட்டு இன்னும் என்ன என்ன
செய்யவேண்டும் என்று கூறும்.
இப்படி பெண்குருவி வந்து கூறிய
பின்பு தான் இந்த ஆண்குருவிகள் வாசல் அமைக்க ஆரம்பிக்கும் அப்படி பெண் குருவிகள்
வந்து பார்த்து ஒரு கூடு நிராகரிக்க்கப்பட்டால் அந்த ஆண்குருவி அந்த ஆண்டு
சன்னியாசி தான் சரியாக வீடு கட்டத் தெரியாத ஆண்பறவையை எந்த பெண்பறவையும் ஏற்பது
இல்லை.
இந்த ஆண்பறவைகள் தனது வீட்டை கட்ட
போடும் முதல் முடிச்சி மிகவும் நேர்த்தியாகவும் உறுதியாகவும் இருக்கும், மற்றும் இந்த ஆண்குருவி முதல் முடிச்சி போடுவதற்கு முன்பே அந்த கூடு
எத்தனை அறைகளை கொண்டிருக்க வேண்டும் என்ற அனைத்தையும் அந்த முதல் முடிச்சி
போடுவதற்கு முன்னதாகவே தீர்மானம் செய்து அதற்கு ஏற்ற வகையில் மிகவும் வலுவாக
போடுகிறது அந்த முதல் முடிச்சை.
இந்த பறவைகள் தனது கூடுகளை அமைக்க தோகை
கொண்ட மரங்களின் நாறுகளை தேர்ந்தெடுக்கிறது தென்னை ஓலை அல்லது பனை ஓலை, கரும்பு,
சோளம் போன்றவற்றின் நார்களை பயன்படுத்துகிறது, இப்படி இந்த கூட்டை கட்ட பதினெட்டு
நாட்களை எடுத்துக் கொள்கிறது இந்த ஆண்பறவை. அதோடு முடியவில்லை இந்த பதினெட்டு
நாட்களில் தொனூரு சதவீத கூட்டை மட்டுமே கட்டி முடிக்கிறது.
அப்படியென்றால் இந்த கூடு எவ்வளவு
நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள் !
இந்த பெண் பறவைகள் வந்து ஆண்பறவை
கட்டிய வீடு பிடித்துள்ளது என்று கூறி சென்றபின்பு தான் மீதமுள்ள பத்து சதவீத
வேலைகள் அதாவது வாசல் அமைக்கும் வேலையை துவங்குகிறது இந்த ஆண்பறவைகள்.
அதுவும் சாதாரணாமாக இல்லை, இந்த
பறவைகள் தொன்மேற்க்கு பருவமழை அதிக காற்றோடு பொழியுமா என்பதை இலகுவாக அறிந்து
கொண்டு அதற்க்கு எதிர்திசையில் அதாவது வடக்கு திசையில் வாசலை அமைக்கிறது அதாவது
மழை நீர் தனது வீட்டிற்குள் வராதா வகையில் வடிவமைக்கிறது.
இப்படி வாசல் வைத்தபின்பு இந்த
பெண்குருவி வருகிறது கூட்டிற்கு வந்து இரண்டு குருவிகளும் இணை சேருகிறது, இணை
சேர்ந்து முட்டை இடுகிறது இந்த முட்டை காற்றில் கூடு ஆடும் போது ஒன்றோடு ஒன்று
மோதிவிட கூடாது என்பதனால் இந்த ஆண்குருவி அங்கங்கு இருந்து மண் எடுத்துவந்து கூட்டை
சமன்படுத்தும் வேலையை செய்து முடிக்கிறது ஆண்குருவி.
அதன்பின் குஞ்சுகள் பொறித்து
வளரும் போது இந்த குஞ்சுகள் தானாக இறையை கொத்தி பழக வேண்டி சிறு சிறு பூச்சிக்களை
இந்த ஆண்குருவியும் பென்குருவியும் சேர்ந்து கொண்டு வந்து உள்ளே வைத்திருந்த மண்ணில் பதித்து
வைக்கிறது பூச்சிகள் பறந்து விடாமல்
இருக்க, இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த குருவிகள் மின் மினி பூச்சிகளையும் பிடித்து
வந்துவிடுகின்றன பகலில் அது மின் மினி
பூச்சி என்பது அதற்கு தெரியாது !!
அந்த காலத்தில் அத்தனை மின் மினி
பூச்சிகள் இருந்தன இப்போது இந்த இரசாயன உரத்தினால் நிறைய அழிந்து போய்விட்டன! சரி....
இதில் என்ன ஆச்சர்யம் என்று
கேட்கலாம் ? ஆமாம் தாத்தா நானும் அதனை தான் சிந்தித்தேன்; ம்...சொல்கிறேன் கேள்
பிடித்து வந்த மின் மினி பூச்சிகள்
அந்த மண்ணில் சிக்கி இருப்பதனால் வெளிவரமுடியாமல் வெளிவர போராடி அப்படியே ஒளிர
ஆரம்பிக்கும் அதனை இரவில் பார்க்கும் போது சற்று கற்பனை செய்து பார், இப்போது நீ
பார்த்து வியந்து வந்ததை விட அற்புதமாக இருக்கும்...
இந்த வெளிச்சத்தை பார்த்து
பாம்புகளும் ஓணான்களும் அந்த கூட்டை நெருங்காது எவ்வளவு பாதுகாப்பு; இது உண்மையில்
ஆச்சர்யம் தானே ?
நிச்சயமாக தாத்தா என்றேன்
இது இதோடு முடிவதில்லை இந்த
ஆண்குருவி அடுத்த ஒரு கூட்டை கட்ட ஆரம்பித்து விடும் இப்படி ஒரு சீசனில் ஒரு
ஆண்குருவி நான்கு ஐந்து பென்குருவிகளை தாய்மை அடைய செய்கிறது.
ஓ அதனால் தான் இத்தனை கூடுகள்
குவிந்துள்ளனவா என்று எண்ணி வியந்தேன்!
அப்படியே பேசிகொண்டிருக்கும் போது
நண்பர்கள் அழைத்தனர். சுட சுட கூட்டான் சோறு தாயார் என்றனர், காற்றில் வந்த மணமோ அதன்
சுவையை உணர்த்தியது. என்னை இயற்கையின் உணர்வுக்குள்
கற்பனையோடு கலக்க உதவிய தாத்தாவையும் அழைத்தேன் வாருங்க தாத்தா ஒண்ணா சாப்பிடுவோம்
என்றேன் அவரோ நீங்க சாப்டுங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல நீர் பாய்ச்சி
முடிஞ்சிரும் வீட்டுக்கு போய் பழையது குடிச்சா தான் தெம்பா இருக்கும் என்றார்,
நானும் சரி தாத்தா என்று கூறி தாத்தா கூறிய வியத்தகு விடயங்களுக்கு நன்றி கூறிவிட்டு
தாத்தாவிடம் இருந்து விடைபெற்றேன்...
நன்றி
பேரொளியின் கற்பனை துகளில் இருந்து
நான்;
பிரதீஸ்
- Get link
- X
- Other Apps
Comments
Nice keep it up😍
ReplyDeleteNice
ReplyDeleteArumai
ReplyDelete