பறவைகளே என்னிடம் வாருங்கள் !!
இறை தேடி காலத்தை வீணாக்காதீர்கள்
பறக்கத் தெரிந்த நீங்கள் பதுங்கி இருத்தல் முறையோ ?
குறிப்பிட்ட ஒரு வட்டத்தில் உணவு குடும்பம் குட்டி என்று நீங்களும் மனிதர்களைப் போல வாழ்ந்து மாண்டு போகாதீர்கள் !
இளம் தென்றல் வீசும் மாலைப் பொழுதில் கண்கள் மங்கி கூட்டினுள் அடைபட்டுக் கிடக்காதீர்கள்;
இந்த வேளையில் அல்லவா வானுயர பறக்க வேண்டும்!! மங்கும் சூரியனை வழியனுப்ப வேண்டும்!!
பொங்கும் அலைகளில் புதைந்து நாம் எழ வேண்டும்!!
உயர்ந்த மரக்கிளைகளில் ஒய்யாரமாய் அமர்ந்து ஆட வேண்டும்!!
ஆனால் நீங்களோ !
சிறகுகள் இருந்தும் பறக்கச் சோம்பல் கொண்டு குதித்துச் செல்கிறீர்கள்;
மனிதனுக்கு மனம் விரிக்கத் தடை இல்லை; உங்களுக்குச் சிறகை விரிக்க என்ன தடை?!
மனதால் உலகம் முழுதும் பறக்கும் மனிதனுக்குப் பறக்கச் சிறகு இல்லை
சிறகு இருக்கும் உங்களுக்கு உலகம் சுற்ற விருப்பம் இல்லை;
கடவுளுக்குப் படைக்கத் தெரியவில்லையோ என்னவோ !?
ஆம் பறக்கும் எண்ணத்தையும் கற்பனையும் கொடுத்த அவன் சிறகைக் கொடுக்க வில்லையே;
கண்ணில் காட்சிகள் ஆயிரம் காட்டி எதற்கும் விளக்கம் தரவில்லையே;
உலகியல் விதிகள் யாவும் தளர்த்தப்பட வேண்டும்; உறவுகள், எனும் அனைத்து கொடிய விச ஜத்துக்களுக்கும் அதை விடக் கொடிய கருநாக விஷம் மருந்தாக கொடுக்க வேண்டும்;
பணம் எனும் பிச்சைக்காரனுக்கு இவ்வளவு தான் வாழ்க்கை என்பதனை உறவுகள் மூலம் அறிந்திடச் செய்யவேண்டும்;
குருவிகளே என்னுடன் வாருங்கள் உங்களுக்குக் கற்பனைகள் நான் கொடுக்கின்றேன்
எனக்கு சிறகுகளைக் கொடுங்கள்!!
தொடுவானில் பறக்கும் கழுக்களுக்கு புது விளையாட்டைக் கற்பித்து வருகிறேன்!!
கண்கள் காணாத புது தேசம் சென்று அங்கேயும் கால் பதிப்போம், நிம்மதி இல்லாமல் அலையும் மாந்தருக்கு வாழ்வை கற்றுத் தருவோம், இனி வரும் காலங்களில் காணவிருக்கும் கற்பனைகளுக்கும் சேர்த்து உலகை ஒரு முறை சுற்றி வருவோம்;
சிறகுகள் உடைபடும் வரை பறப்போம்!!
கனவுகள் தடைப்படும் வரை காண்போம்!!
உறவுகள் வெறுக்கும் வரை நேசிப்போம்!!
மறுமுறை பிறக்கும் வரை வாழ்வோம்!!
வேசம் கலையும் வரை நடிப்போம்!!
அன்பு கரையும் வரை அரவணைப்போம்!!
பேரொளியின் கற்பனை துகளிலிருந்து நான்
0 Comments
நன்றி