ஒரு கடமையை செய்ய முடியவில்லை என்றால் உண்மையின் எதார்த்தத்தில், ஆன்ம ஒழுக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு தான் கடமை தவரியதாகவே தெரியும். யாரையும் புறக்கணித்து தான் பெரியவன் என்று காட்டிக் கொள்வதில் இயலாமையும், ஒழுக்கமின்மையும் மட்டுமே நிறைந்திருக்கும்.
தேவைகளை பொறுத்து வார்த்தைகளை பிரயோகிப்பதில் மனிதன் மிகவும் சிறப்பானவன் தான். அவனது அனுபவத்தைக் கொண்டு அறிவை திசை திருப்பி, மாயை நிரப்பி வாழ்வின் நெறி மாறி தனக்கு தானே நான் யார் தெரியுமா என்று கேட்டு அகத்தில் மகிழ்ந்து கொள்கிறான்.
தன்னுடைய இயல்பை மறைத்து ஒரு வேடம் தரித்துக் கொள்கிறான். அது அவனை ஒரு வித பிரமை நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை உணர மறுக்கிறான். கடமை என்றான போது அங்கு காரணங்கள் சொல்ல பழகிவிட்டோம் அனைவரும்.
எமது பயணங்களை இந்த மனிதர்கள் பல வகையில் நிறைவு செய்கிறார்கள் யாரையும் கவனிக்க தவறியதில்லை. மனித மனத்தின் வேகம் அவனின் கண்கள் அற்புதமானவை அகத்தை பிரதிபலிக்கின்றன. அவன் யாரையோ ஏமாற்றுவதாக எண்ணி பொய் என்னும் மறைநிரை வார்த்தைகளை அவனுக்குள் நிரப்பிக் கொள்கிறான்.
அது அவனை கொஞ்சம், கொஞ்சமாக விழுங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர மறுக்கிறான். தனது தற்போதைய வார்த்தைகளால் இன்னொருவர் செயலின் வேகத்தை தடை செய்கிறான்.
சலிப்பை ஏற்படுத்துகிறான் ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்ட தகுதியும் மரியாதையும் உண்டு என்பதை அறிந்திருக்கவில்லை அவன். வண்ணத்துப் பூச்சியை ரசிக்க விரும்பினால் அவற்றை பறக்க விடுங்கள்.
கைகளில் வைத்துக் கொண்டு நசுக்கி கொன்று புத்தகங்களில் சேமித்து வைப்பது போல் மனிதர்களை கையாள நினைக்கும் போது அது எதிர்வினையாக மாறுகிறது.
அது சுகந்திரம் தேடி பறக்க எத்தனிக்கிறது. உங்கள் கண் மறைந்து பறக்க துவங்கிய பின் கலங்குவது அர்த்தமற்றது.
யான் பேரொளியின் கருணை துகளில் இருந்து
பிரதீஷ்
0 Comments
நன்றி