பிரியாணி வேண்டும் என்று அவள் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தாள், நாளை வாங்கி தருகிறேன் என்று அவளை சமாதானப்படுத்தி, சமாதானப்படுத்தி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
கையில் பணம் இல்லாமல் இல்லை, இருந்தும் தற்போதைய நிகழ்வுகள் ஒரு பிரியாணியை தள்ளிப் போட்டுக் கொண்டே போனது. சில சமயங்களில் பிரியாணி இன்று வாங்கி வருகிறேன் என்றாலும், அவள் இல்லை வீட்டில் சாதம் நிறைய இருக்கு இன்னொரு நாள் பார்க்கலாம் என்று அவளே அவளை சமாதானம் செய்து கொள்கிறாள்.
இன்று எப்படியாவது வாங்கி கொடுத்து விட வேண்டும்மென்று வீடு வந்து பார்த்தான், கருவாட்டு குழம்பு மணம் கம, கம வென்று வீடெங்கும் வீசியது.
சரி பரவாயில்லை வாங்கி கொடுப்பது என்றாயிற்று வாங்கி விடுவோம் என்று கடைக்கு கிளம்ப நான் கருவாட்டு குழம்பு வைத்து வயிறு புள்ளா சாப்டாச்சி என்று அவள் கூற…
சரி பரவாயில்லை ரொம்ப நாளா வாங்கி தர முடியாம போய்ட்டு இருக்கு இன்னைக்கு எனக்கும் பிரியாணி சாப்பிடனும் போல இருக்கு நான் போய் வாங்கிட்டு வாறேன் நீ கொஞ்சம் நேரம் கழிச்சி பசிக்கும் போது சாப்பிடு என்றவனாய் கடைக்கு சென்றான்.
பிரியாணிக்கென்றே பிரத்யோக கடை இருக்க அந்த கடையும் ஞாயிறு விடுமுறையாம்;
எந்த நாட்களில் வியாபாரம் அதிகமாக நடக்குமோ அன்று புத்திசாலி தனமாக விடுமுறை என்று கிளம்பி விடுவார்கள் போல சோம்பேறிகள் என்று முனங்கியவனாய் அடுத்த கடை நோக்கி நகர்ந்தான்.
அங்கு பிரியாணி என்று மட்டுமே ஒரு பதாகை தென்பட்டது, ஆனால் அந்த கடையில் காலை பரோட்டா,தோசை, இட்லி மற்றும் மதியம் பிரியாணி பரோட்டா. இரவு வேளைகளில் காலையை போலவே இங்கு மாஸ்டர் முஸ்லீம் வேறு, சரி அப்படியாக பிரியாணி வெகு விமர்சையாக இருக்கும் என்று எண்ணி அண்ணா… ஒரு பார்சல் பிரியாணி எவ்வளவு என்று கேட்க 130௹ என்றார் கடை முதலாளி…
130௹ என்றதும் அவன் நினைவு “ம்ம்…பிரியாணி சூப்பரா இருக்கும் போல எல்லா கடையிலும் 100௹ தான் இங்கு 30௹ அதிகமாக இருப்பது போலவே சுவையும் அதி பயங்கரமாய் இருக்கும்” என எண்ணி அண்ணா இரண்டு பார்சல் பிரியாணி கொடுங்க என்று வீட்டிற்கு வாங்கி வந்தான்.
அவள் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். சரி நாம் சாப்பிடலாம் என்று அவன் பொட்டணத்தை திறந்து பார்த்தான் பிரியாணி வெள்ளை நிறத்தில் இருந்தது.
கடைகாரன் நெய் சாதம் சமைத்து அதில் ஒரு சிக்கன் பீசும் முட்டையும் வைத்து பிரியாணிஎன்று அவனும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றி வந்துள்ளான் என்பது தெரிந்து கோபம் கொண்டவன், சரி பொட்டணம் கட்டி கொடுத்த கிரேவியை ஊற்றிப் பார்க்கலாம் அது சுவையாக இருக்கும் என்று எண்ணி கொடுக்கப் பட்ட கிரேவி ஊற்றி சாப்பிட்டால் அது இன்னமும் மோசம் சரி அவள் ஆசை பட்டு கேட்டாள், இன்று வேண்டாமென்று கூறிய பின்னும் வாங்கி வந்தது நம் குத்தம் தான் என்று பிரியாணியை என்ற புனைப் பெயர் கொண்ட அந்த நெய் சாதத்தை தூக்கி வீசலாம் என்று நினைத்த போது லேசாய் கருவாட்டு குழம்பு வாசம் வீசியது.
அவன் கருவாட்டுகுழம்பை ஊற்றி நன்றாக பிசைந்து தின்றான் அதன் சுவை ஆ…ஹா… பிரியாணி என்ன பெரிய பிரியாணி என்று தோன்ற செய்தது.
அன்று அவனுக்கு கிடைத்த பாடம் இனி பிரியாணி வேண்டுமென்றால் வீட்டில்ஒரு நாள் சமைத்து விட வேண்டும் ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று…..
அதுவும் ஒரு வகையில் உண்மை தான் அல்லவா!
0 Comments
நன்றி