சம்மதி (சிறுகதை)

 


ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. இப்போது தான் ஏதோ தெய்வத்தின் கருணையினால் திருமண வரன் கைகூடியுள்ளது. இனியும் தாமதிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுகிறேன் என்று சுபாஷின் தந்தை முருகேசன் மணமகள் வீட்டாரிடம் கூறுகிறார்.

பெண் வீட்டார், மாப்பிள்ளை சுபாஷை பார்த்து “எங்களுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு அவரு இப்பவே பொண்ண கூட்டிட்டு போனா கூடா எங்களுக்கு சம்பந்தம் தான்.” என்று கூற சுபாஷ் கொஞ்சம் வெட்கத்தில் தலை குனிந்தான். 

இருவர் வீட்டாரும் சிரிக்க.. மணமகளை அழைக்கிறார் தனம், மணமகளின் அத்தை. “ரேவதி காபி கொண்டு வா, மாப்பிள்ளைக்கு இனியும் பொறுமையில்லை.” என்று கூற குடும்பங்கள் உடல் குலுங்க சிறிதொரு சிரிப்பை வெளிப்படுத்தினார்கள். வெளியே நடந்து வருகிறாள் ரேவதி.

சுபாஷ் அவளை பார்த்தபடியே இருக்கிறான். தனம் சுபாஷிடம் நீங்க லவ் பண்ண பொண்ணு தான அப்புறம் ஏன் இப்படி பாக்குறீங்க என்று கேட்டாள். அனைவரும் ஆளுக்கொன்று கூறி நகைத்தார்கள்.

சுபாஷ் அமைதியாக இருந்தான். சுபாஷின் தந்தை முருகேஷன் “டீ சூப்பர், நீ தான் போட்டியாமா?”

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் தாயின் முகத்தைப் பார்த்தாள். முருகேஷன் புரிந்துகொண்டார், அப்படியே தொடர்ந்தார் உனக்கு எப்படி இவனை பிடிச்சது எனக்கு தெரியலாமா! ஆனா உன்ன லவ் பண்ண அப்புறம் தான் குடிக்கிறத நிறுத்தினான் என்றார்.

சுபாஷ் வேர்த்து விறு, விறுத்துப் போனான். என்ன சொல்லுறாரு இவரு என்று எண்ணிக் கொண்டான். அவன் அம்மா பாக்யம் அவர் அருகில் நெருங்கி சிறு முகம் சுளித்த புன்னகையுடன் அவர் காலில் கிள்ளினாள்.

மணமகள் வீட்டார் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகளும் தான். ஏனென்றால் அவளுக்கும் தெரியாது அவன் குடிப்பான் என்று. இன்பமாய் கூடிய சுபநிகழ்சியில் மரண செய்தி கேட்டது போன்ற ஒரு நிசப்தம் நிலவியிருந்தது.

சுபாஷ் நீ குடிப்பாயா? என்று ரேவதியும், மாப்பிள்ளை நீங்கள் குடிப்பீர்களா? என்று ரேவதியின் அம்மாவும் கேட்க முனைந்தனர். ஏனோ,ஏதோ முழுமையடையாதது போல தோன்றியது முருகேஷின் வார்த்தை. ரேவதியின் அம்மாவால் அதையும் கட்டுப் படுத்த முடியாமல், “என்ன சொல்லுறீங்க சம்மதி என்று கேட்டாள்.” 

முருகேஷன், சற்றும் தாமதிக்காமல் உங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரு தகப்பனாக நான் உண்மையை கூறுவது தான் உத்தமம் என்று நினைக்கிறேன் என்றார்.

“அடே, உத்தமா.. உன்னோட உத்தமத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கிடச்சிதா?” என்று சுபாஷ் மனதில் உறுமிக் கொண்டிருந்தான். 

அவனால் ரேவதியை தலைநிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ரேவதியோ அவன் மீது ஆத்திரம் கொண்டவளாய் நிற்கிறாள். நிச்சயத்தை நிறுத்துவிடுவோமா என்றெல்லாம் அவள் மனம் அலைமோதிக் கொண்டிருந்தது. என்னவென்றாலும் எட்டாண்டுகள் காதல் இத்தனை வருடங்களில் என்னிடம் எதையாவது மறைக்கிறாயா என்று பலமுறை கேட்டுள்ளாள் ரேவதி. ஒவ்வொருமுறையும் உன்னிடம் மறைக்க ஒன்றுமில்லை செல்லம் என்று தான் கூறியிருந்தான் சுபாஷ்.

ரேவதிக்கு அவன் கூறிய வார்த்தைகள் மட்டுமே அவள் அடிமனதில் வண்டின் இரைச்சல் போல ரீங்காரம் கொண்டிருந்தது.

முருகேஷ் தொடர்ந்தார், அவன் மது அருந்துவான என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவன் நண்பர்கள் மது அருந்துவதை நான் பார்த்திருக்கிறேன். எந்த நேரமும் இவன் அவர்களுடன் தான் சுற்றுவான். எனக்கு அதனால் இவன் மீது ஐயம் உண்டு. 

ஒருவேளை அவன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மது அருந்தியிருக்கலாம். அது அவனது சில நடவடிக்கைகள் எனக்கு உணர்த்தியது.

ஆனால் உன்னை காதலிப்பதாக அவன், அவனுடைய அம்மா பாக்யத்திடம் கூறியபின் அதுபோன்ற சந்தேகங்கள் அவனிடம் எனக்கு தோன்றவில்லை. அதனால் உனக்கு நான் நன்றி தான் சொல்லவேண்டும்.

மற்றபடி இந்த திருமணத்தில் எனக்கு கொஞ்சமும் விருப்பம் கிடையாது. என்னுடைய தங்கையின் மகளை அவன் திருமணம் செய்து கொள்வான் என்று என் தங்கை மிகவும் ஆசையாக இருந்தாள்.

ஆனால் அவன் திருமணத்திற்கு முன்பே அவளிடம் நெருங்கி பழகியது எனக்கு பிடிக்கவில்லை.

சுபாஷ் அங்கிருந்து எழுந்தான். முருகேஷ் அவன் கைகளை பிடித்து இழுத்து அமரச் செய்தார். அவன் கோவமாக சற்று உயர்ந்த குரலில், ரேவதி உனக்கு முன்னவே தெரியும் அப்பாவிற்கு மனநிலை சரியில்லையென்று. நீ அவரைப் பற்றி நன்கு அறிந்தும் அதிர்ச்சியாகி அமைதியாக நிற்பதன் காரணம் எனக்கு புரியவில்லையென்றான்.

ரேவதி அமைதிகாத்தாள், அவள் அம்மா “அடியாத்தி பைத்தியமா இவரு, ஆளு வாட்டம் சாட்டமா இருக்காரேன்னு நினச்சேன்.” என்று சொல்லி அப்பாவின் வியாதி நாளை மகனுக்கு வராது என்று என்ன நிச்சயம் என்று கேட்டாள்? அதனை சுபாஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவன் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருந்தான்.

சூழ்நிலை அவன் கைமீறியிருந்தது. அவன் அவனது அம்மா பாக்கியத்தை பார்த்து முறைத்தான். பாக்யம் தலைகுனிந்து கொண்டாள்.

உறவினர்கள் ஒருவருக்கொருவர் முனு, முனுத்துக் கொண்டிருந்தனர். புகைப் பட கலைஞர்கள் நடப்பதை ஒளிப் பதிவு செய்துக் கொண்டிருந்தனர். 

சுபாஷ், நீ இருப்பா அப்பா இருக்கேன்ல நான் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறேன் என்றார் முருகேஷ். 

முருகேஷ் தொடர்ந்தார், அம்மா ரேவதி நீ முதல்ல உக்காரு காபி கொண்டு வந்த கையோட நிக்கிற அளவு என்ன பிரச்சனை நடந்துச்சு? நானும் உனக்கு அப்பா மாதிரி தான் நீ தைரியமா சொல்லு அப்பா கிட்ட, உன்ன யாரு என்ன சொன்னா? 

ஏண்டி பாக்யம் பிள்ளைகிட்ட நீ ஏதாச்சும் சொன்னியா? சமைக்க தெரியுமான்னு கேட்டுருப்ப ! எப்படா மருமக வருவா எல்லாத்தையும் அவ கிட்ட கொடுத்துட்டு உனக்கு ஊரு கதை பேசனும் அதான! அடி ராஸ்கல் என்று கூறிக் கொண்டு அவர் சிரித்தார்… ஹா.. ஹா பைத்தியம்.. வர போற மருமக கிட்ட இப்படியா பேசுறது! என்று முறைத்தார்.

கூடி இருந்த அனைவரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ரேவதிக்கு அப்போது தான் மூச்சே வந்தது. 

அவருக்கு இப்போ நான்கு வருடமாக தான் இந்த பிரச்சனை. மாடு மேய்க்க சென்ற இடத்தில் தென்னை மரத்தில் இருந்து தலையில் விழுந்த தேங்காயால் இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து தெளிந்தார் அதன் பின் தான் இப்படி அடிக்கடி ஏதோ கற்பனைக்கு சென்று அதனை நிஜமென்று நம்பி அவர் பயந்து சுற்றி இருப்பவர்கள் இடம் அது உண்மையென்றே விளக்குவார், என்று சுபாஷ் அவன் வருங்கால அத்தை சரஸ்வதியிடம் கூறினான்.

அதனால் நீங்கள் எனக்கும் இப்படி ஆகுமோ இது பரம்பரை நோயோ என்றெல்லாம் எண்ணி பயப்பட வேண்டாம் என்றான்.

ரேவதிக்கு அவரைப் பற்றி தெரிந்தும் நிச்சயம் செய்யும் நேரத்தில் அப்படி ஒரு செய்தியை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ரேவதியின் அம்மா சரி இதுக்கு மேல இப்படியே பேசிட்டு இருந்தா அடுத்து என்ன பூகம்மத்த கிளப்ப போராரோ சம்மதி தெரியல. வாங்க தட்டை மாத்திப்போம்னு ரேவதி அம்மா முகூர்த்த தாம்பாளம் எடுத்து கையில் வைத்துக் கொண்டு “அப்பா இல்லாத பொண்ணு செல்லமா வளத்துடன் நீங்க தான் பாத்துக்கணும்.” என்று தாம்பூலத்தை பாக்கியத்தின் கையில் கொடுத்தார்.

பாக்யம் மனம் நிறைந்த புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். 

முருகேஷ், “யம்மாடி அம்ஷா”

அம்ஷா, கிம்ஷா லா யாரும் இல்ல ஒழுங்கா தாம்பூலத்தை கொடுங்க என்று பாக்யம் அவரை அதட்ட அனைவரும் அவரை பார்த்து மனம் நிறைந்து சிரித்தனர். 

ஒரு நிமிடத்தில் மொத்த சந்தோஷத்தையும் குழப்பிடாறு சம்மதி என்றாள் தனம். 

சரி சாப்பாடு ரெடியா இருக்கு எல்லாரும் வாங்க  என்றாள்.



Post a Comment

0 Comments